search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கு நீர்வீழ்ச்சி"

    • கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருந்தது.
    • சுற்றுலா பயணிகள் வருகையால் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

    ஆனைமலை:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா ஊரடங்கால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து மிதமான தண்ணீர் விழுந்து வருகிறது.

    இதையடுத்து இன்று முதல் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    7 மாதங்களுக்கு பிறகு நீர்வீழ்ச்சி திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் காலையில் இருந்தே கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டமான திருப்பூர் பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டமாக அருவிக்கு வந்தனர்.

    அவர்கள் அருவியில் குடும்பத்துடன் ஆனந்தமாக உற்சாக குளியல் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுற்றுலா பயணிகள் வருகையால் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

    • தமிழக-கேரள எல்லையையொட்டிய கேரள பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, சார்ப்பா நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள கவியருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை முதல் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது.

    இந்த மழையால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் புதிது புதிதாக நீர்வீழ்ச்சிகளும் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மழைக்கு அண்ணாநகர் பகுதியில் கனகராஜ் என்பவரின் வீடு அருகே மண்சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்தது.

    தொடர் சோலையார் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இதுதவிர தமிழக-கேரள எல்லையையொட்டிய கேரள பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, சார்ப்பா நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் புகைப்படம் பிடித்து மகிழ்ந்தனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை உள்ளது. அணைக்கு அருகே உள்ள வனப்பகுதிக்குள் கவியருவி(குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது. இந்த அருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள கவியருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

    இதேபோல் நெகமம் கிணத்துக்கடவு, வடசித்தூர், காட்டாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

    கோவை மாநகர் பகுதிகளில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையில் சரவணம்பட்டி, காளப்பட்டி, கோவில்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    அதனை தொடர்ந்து மதியத்திற்கு பிறகு காந்திபுரம், பீளமேடு, ரெயில் நிலையம், வடவள்ளி, கணபதி, துடியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சாலைகளிலும், சாலை ஓரத்திலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

    மதியத்தில் இருந்து இரவு வரை மழை நீடித்ததால் பள்ளி சென்ற மாணவர்கள் பள்ளி முடிந்ததும் மழையில் நனைந்தபடியே தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். சில பெற்றோர் குடைகளை எடுத்து வந்து தங்கள் பிள்ளைகளை அழைத்து சென்றனர். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியவர்களும் மழையில் நனைந்தபடியே பயணித்தனர்.

    கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கோவையில் நிலவி வந்த வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்கோனாவில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சின்கோனா-102, சின்னகல்லார்-87, வால்பாறை பி.ஏ.பி-69, வால்பாறை தாலுகா-68, சோலையார்-45, ஆழியார்-30.


    • விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.

    அரவேனு,

    கோத்தகிரியில் இருந்து மசக்கல் செல்லும் வழியில் உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நீர்வீழ்ச்சி சுற்றிலும் அதிகப்படியான விவசாய பூமிகள் இருந்து வருகிறது. மேலும் இந்த நீர் வீழ்ச்சியில் இருந்து வரும் நீரின் மூலம் மசக்கல் கூக்கலதெறை பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, சைனீஸ் காய்கறிகள் எனப் பலதரப்பட்ட காய்கறிகளை விளைவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விடுமுறை நாட்கள் என்பதாலும், அனைத்து சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வதாலும் இந்த நீர்வீழ்ச்சிக்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

    நீலகிரிக்கு வரும் வழியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.

    ×